படுக்கப்பத்து நாடார் வரலாறு

படுக்கப்பத்து பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அறிந்தவர்கள் கொடுத்து உதவினால், சரிபார்க்கப்பட்டு இப்பகுதியுடன் தேவையாயின் திருத்தி சேர்க்கப்படும்.

புரிந்த படுக்கப்பத்து வரலாறு

17 ஆம் நூற்றாண்டில் உருவான படுக்கப்பத்து பற்றிய வரலாற்றினை கிடைக்கும் சின்னச் சின்னப் பேச்சு வழக்கு குறிப்புகளைக் கொண்டு நான் (செல்வ ஆதித்தன்.கு) இங்கு தொகுத்து, வருங்காலத்தின் இலட்சிய இலக்கினைப் பூட்டிக் கொடுப்பதில் மகிழ்ச்சி. படுக்கப்பத்து என்ற ஊர் உருவானது 17 ஆம் நூற்றாண்டில் தான். அதாவது தற்பொழுது பெரும்பான்மையாக வாழும் நாடார் சமூகத்தின் ஆதிக்கத்திற்குள் அப்பகுதி வந்தது 1650 - 1700 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தான் வந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாடார்களின் ஆதிக்கத்தால் இணங்கியவர்கள் அரவணைக்கப்பட்டனர், எதிர்த்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

நாடார் என்றால் நாடு ஆள்பவர்கள் என்று சொல்வழக்கு மற்றும் நாடான் என்றால் பெரும் நிலக்கிழார் என்று சொல்வதற்கு இணங்க, தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தி நிலப்பரப்பினை கைப்பற்றி படுக்கப்பத்து என்ற ஊரினை உருவாக்கிக் கொண்டனர். இப்பரப்பிற்குள் முதன்மையாக வந்தவர், குமாராதித்தன் நாடார். இவர் இங்கு வந்தக் காலக்கட்டத்தில் நாடார்களின் ஆதிக்கம் முழுமையாக சரிந்துவிட்டது என்பதனை மன்னர் ஆட்சிமுறை வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது சேர சோழ பாண்டியர்கள் ஆதிக்கம் முடிந்துவிட்ட காலம். துலுக்கர்கள், நாயக்கர்கள் என்று மாறிவிட்ட காலம். நான் இங்கு கொடுக்க இருப்பது ஒர் நீண்டதொரு முன் இலக்குப் பார்வை, ஆகையால் குமாராதித்தன், வேலாதித்தன், சேர்ந்தாதித்தன், மார்த்தாண்டம் மற்றும் பிறர் என்று ஒர் வட்டத்திற்குள் பார்க்காமல் நீண்ட பின்னோக்குப் பார்வையினையும் சேர்த்திருக்கிறேன்.

குமாரதித்தன் நாடார் படுக்கப்பத்து நிலப்பரப்பிற்குள் வந்தது, ஒர் குடில் அமைத்து ஒண்டி வாழ்வதற்கு அல்ல, தனக்கான ஆட்சி எல்லையை அமைத்து பிறர்க்கும் வாழ்வாதரம் கொடுக்கும் ஊர் அமைத்திட. ஏனென்றால் இவர் நாடார், தனக்கான நாட்டை உருவாக்கிட, தான் ஒடுக்கப்பட்ட எல்லையிலிருந்து, தன்னால் ஒடுக்க முடியுமான எல்லையை நோக்கி நகர்ந்து வந்த இடம் தான் தற்போதைய படுக்கப்பத்து. குமாராதித்தன் நாடார் நாகர்கோவில் பகுதியிலிருந்து வந்தவர் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம், வந்தவர் முதலில் அடைக்கலம் பெற காரணமாக இருந்தது, கோணார் பெண்ணை வம்பர்கள் செய்த சேட்டையிலிருந்து காத்தமைதான் என்பதனை மறக்கக்கூடாது. நாடார்கள் என்றுச் சொன்னாலே வர்மக்கலையிலும் சிலம்பக்கலையிலும் தேர்ந்தவர்களாக இருந்திருந்தனர். குமாரதித்தன் நாடார் வர்மக்கலையில் சிறந்தவர், சிலம்பக்கலை வீரன். தனக்கான ஆளுமைப்பரப்பைத் தேடும் நீண்ட தூரப்பயணத்தில் படுக்கப்பத்தினை வந்தடைந்தவர், அங்கிருந்த சண்டியர்களை தாக்கியதன் மூலம் ஏற்பட்ட கோணார்களின் பயத்தினைப் போக்கப் பாதுகாப்பாக அவர்களோடு தங்கியிருந்துள்ளார். அப்பொழுது, சுற்றுவட்டார ஊர்ச்சூழல் மற்றும் குடிமக்களை நன்காக அறிந்து கொண்டதோடு தனக்கான பகைவர்கள் யார், அவர்களுக்கான துணைவர்கள் யார் என்று அனைத்தினையும் புரிந்துகொண்டு அடுத்தக்கட்ட இலக்காக ஊரைக் கைப்பற்றுவதற்காக களமிறங்க ஆயத்தமானர். ஊரைக் கைப்பற்றும் திட்டத்தில் தன் தம்பியான வேலாதித்தன் நாடார் உள் இறக்கப்படுகிறார். பகைவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள், சண்டியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், நிலப்பரப்பு கைப்பற்றப்படுகிறது, வாழ்ந்த குடிமக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், படுக்கப்பத்து என்ற ஊர் உருவாகுகிறது. குமாராதித்தன் நாடாரும் வேலாதித்தன் நாடாரும் படுக்கப்பத்தை கைப்பற்றும் பொழுது, அங்கு வணங்கப்பட்டு வந்த பெரும் தெய்வங்கள், மடத்துவீடு சைவ வழிபாடு, மாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் சிறுதெய்வங்கள். மடத்துவீடு சைவ வழிபாடு என்பது சித்தர்கள் வழிபாடு. இங்கு முதன்மை தெய்வம் சிவன் & சக்தி மற்றும் விநாயகர், திருமால். ஊரைக் கைப்பற்றும் பொழுது அங்கிருக்கும் கோவிலைக் கைப்பற்றுவதும், ஊரில் கோவிலை எழுப்பவதும் அரசர்களின் நடைமுறைதான். அந்த வகையில் ஊரின் தலைமைக் கோயிலான சித்தர்கள் வழிபாட்டுத்தளம் மடத்துவீடு பொன்னம்பலம் நாதர் கோயில் முதன்மையாகக் கைப்பற்றி ஆளுமைக்குள் கொண்டுவரப்பட்டது. மடத்துவீடு கோயிலைக் கைப்பற்றுவதனை வேலாதித்தன் நாடார் முன்னெடுத்துச் செய்ததால், வேலாதித்தான் நாடார் வழித்தோன்றல்களின் குலதெய்வமாக அவர்களுக்கான தனிக்கோயிலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுதெய்வ வழிபாட்டுத்தளங்கள் குமாராதித்தன் நாடார் வழித்தோன்றல்கள் கைக்குள்ளும், முத்தாரம்மன் கோயில் பெரிய முத்தாரம்மன் என்று மார்த்தாண்டம் நாடார்கள் வழித்தோன்றல்கள் கைக்குள் அடக்கமாகின. மேலும் பல கோயில்கள் ஒவ்வொரு குடும்பத்தாரும் முன்னெடுத்து வழிபட்டு வருகின்றனர். ஊருக்கு என்று ஒர் பொதுக் கோயில் வெயிலுகந்தம்மன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் திருவிழா நடைமுறையில் அனைத்து சாதியினர்க்கும் பங்களிப்பு கொடுக்கப்பட்டுள்ளதில், சாதி மதம் தாண்டிய சித்தர் மரபு கையாளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுவதோடு, மடத்துவீடு கோயில் கையகப்படுத்தும் பொழுது ஒர் மூதாட்டி விளக்கு வைக்குமிடமாகத்தான் இருந்தாலும் சித்தர்கள் வழிபாட்டுத்தளமாக இருந்திருந்தது என்பதனை உறுதிப்படுத்துகிறது. சாதிப் பெயர்கள் எல்லாம் தொழில் பெயர்கள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றையக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு தொழிலும் அக்குல வழி சந்ததிகள் மூலம் தொடர்ந்து செய்யப்பட்டன. ஆனால், இன்று அவ்வாறு அல்ல. ஆகையால் இன்றும் நாம் சாதிப் பெயரை முன்னெடுத்துச் செல்வது சரியல்ல, ஏனெனில் செய்யும் தொழிலே தெய்வம் என்று போற்றும் நாம், அந்தத் தொழிலில் அவர் இல்லாத பொழுது, அந்தத் தொழில் பெயரைச் சொல்லி அவரை அழைப்பது தெய்வத்திற்க்குச் செய்யும் அவமானம். அண்ணன் தம்பி ஆகிய இருவருமாய் சேர்ந்து படுக்கப்பத்தினை கைப்பற்றிக் கொள்ள விரும்பினாலும், அண்ணன் தம்பிக்கும் அப்பால் நட்பு என்ற ஒன்று எப்பொழுதும் ஒவ்வொருக்கும் இருக்கும். இருவருக்குமான நல்ல நண்பரும், சிறந்த வேட்டைக்காரருமான மார்த்தாண்டம் நாடார் தனக்கான ஒர் பகுதியினை பெற்றுக் கொண்டார். குமாராதித்தன் நாடார் வீட்டுப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதன் மூலம் சேர்ந்தாதித்தன் நாடார் தனக்கான மரியாதையையும் பகுதியினையும் பெற்றுக் கொண்டார். குமாராதித்தன் நாடாரும் வேலாதித்தன் நாடாருமாய் சேர்ந்து கைப்பற்றிய படுக்கப்பத்து, உதவிய மார்த்தாண்டாம் நாடார், பெண்ணெடுத்த சேர்ந்தாதித்தன் நாடார் என மேலத்தெரு வேலாதித்தான் நாடார், நடுத்தெரு குமாராதித்தன் நாடார், கீழத்தெரு சேர்ந்தாதித்தன் நாடார் , வடக்குத்தெரு மார்த்தாண்டாம் நாடார் என நான்கு பெரும் பிரிவாக பிரிந்து நான்கு நாடார் தெருவும், மற்றும் பிற வகையறா என தற்போதைய படுக்கப்பத்து உள்ளது. நாம் நாடார் என்றுச் சொல்வதனைக்காட்டிலும் நம் முன்னோர் நாடார்கள் என்று சொல்வதே பொறுத்தம். ஏனெனில் அவர்களே நாடாண்டார்கள். நாம் நாட்டை ஆளத்தெரியாமல் இருக்கிறோம். ஆகையால் திருத்தி, மீண்டும் நாம் நாடாள வேண்டும், நாடார்கள் என்பதனை நிலை நிறுத்த வேண்டும் எனபதற்காக அடுத்தக்கட்ட பார்வையினை விரிக்கிறேன். நாம் நாடார் என்பதனைக் காட்டிலும் தமிழர்கள், அதுவே உண்மை.